கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வழியாக ரேஷன் அரிசி அதிகளவில், கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு. விவேகானந்தன், தலைமையிலான காவல் துறையினர், மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு. தென்னரசு, மற்றும் காவல் துறையினர், கெலமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கொத்தப்பள்ளி அருகே சென்ற பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகளில், 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், விற்பனைக்காக பெங்களூருக்கு கடத்தியதும் தெரிந்தது.
இதையடுத்து வேனில் இருந்த கெலமங்கலத்தை சேர்ந்த சபீர் (37), என்பவரை கைது செய்து தப்பி ஓடிய ஓட்டுநர் ரபீக் என்பவரை தேடிவருகின்றனர். வீட்டில் பதுக்கல் தேன்கனிக்கோட்டை அடுத்த கங்கதேவனப்பள்ளியில், வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல்படி காவல் உதவி ஆய்வாளர் திரு. செந்தில்முருகன், மற்றும் காவல் துறையினர் , அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 50 கிலோ எடை கொண்ட 90 மூட்டைகளில், 4 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கிய சோமசுந்தரம் (45), என்பவரையும் கைது செய்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து 8½ டன் ரேஷன் அரிசி மற்றும் வேனையும் காவல் துறையினர் , பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்