திருச்சி : தமிழக காவல்துறை இயக்குநர் அவர்கள் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில், ஈடுபடும் நபர்களின் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G. கார்த்தி கேயன், இ.கா.ப., அவர்கள் கஞ்சா விற்பனையில், ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கவும், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து சரக உதவி ஆணையர்கள், மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. ‘கஞ்சா தொழில் செய்வது சட்டப்படி குற்றம் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது சமூகத்தின் சீர்கேடாகும்” எனவே கஞ்சா தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், கஞ்சா தொழில் மூலம் வாங்கிய சொத்துக்கள் அனைத்தையும் முடக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்பேரில் திருச்சி மாநகரம் கண்டோன்மெண்ட் காவல் சரகத்திலுள்ள கஞ்சா விற்பனையாளர்கள் கண்டறியப்பட்டு 9 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் பலரது வங்கி கணக்குகள் முடக்குவதற்கு நடவடிக்கை தொடரும். திருச்சி மாநகர முழுவதும் கஞ்சா வியாபாரத்தை ஒழிக்க, அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், தொடர் குற்றச்செயல்களில், ஈடுபடுவோர்கள் குண்டர் தடுப்பு காவலில், கைது செய்யப்படுவார்கள் எனவும், கஞ்சா விற்பனையாளர்கள் சொத்துக்கள், மற்றும் வங்கி கணக்குகள், மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.