கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டையில் சோதனை சாவடி உள்ளது. கும்பகோணம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சோதனை சாவடியில் நேற்று காலையில் காவல்துறையினர் பணியில் இருந்தனர். காலை 9.30 மணி அளவில் சென்னை மார்க்கத்தில் இருந்து கும்பகோணம் மார்க்கமாக கார் ஒன்று வேகமாக வந்தது. உடனே காவல்துறையினர் அந்த காரை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர்.
ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து பண்ருட்டி பகுதி முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டனர். குறிப்பாக சென்னை–கும்பகோணம் சாலையில் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் கடலூர்–பண்ருட்டி சாலையில் கீழ்கவரப்பட்டு என்ற இடத்தில் கார் வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 2 பேர், திடீரென காரில் இருந்த 3 பைகளை எடுத்து முட்புதரில் வீசினர்.
அந்த சமயத்தில் அந்த வழியாக அதே கிராமத்தை சேர்ந்தவரும், ஊர்க்காவல்படை வீரரான முருகானந்தம் என்பவர் தனது 3 நண்பர்களுடன் வந்தார். இவர்களை பார்த்ததும், 2 பேரும் காரில் ஏற முயன்றனர். உடனே சந்தேகத்தின் பேரில் ஊர்க்காவல்படை வீரர் முருகானந்தம், தனது நண்பர்களுடன் விரைந்து சென்று அவர்களை பிடிக்க முயன்றனர்.
அதற்குள் ஒருவர் காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். மற்றொருவர் தப்பி ஓட முயன்றார். அவரை, முருகானந்தம் தனது நண்பர்கள் உதவியுடன் மடக்கி பிடித்து விசாரித்தார். விசாரணையில், கஞ்சா கடத்தி வந்ததாகவும், அதனை முட்புதரில் வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து முருகானந்தம், பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், ஆய்வாளர் ஆரோக்கியராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிடித்து வைத்திருந்தவரை, முருகானந்தம் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து முட்புதரில் கிடந்த 3 பைகளை கைப்பற்றி காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:–
தஞ்சாவூர் ரமணாநகரை சேர்ந்தவர் மலைச்சாமி(35). இவரும், அதே பகுதியை சேர்ந்த சிங்காரம்(40) என்பவரும் நண்பர்கள். கஞ்சா வியாபாரிகளான இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, தஞ்சாவூர் பகுதியில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.
மலைச்சாமியும், சிங்காரமும் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சாவை வாங்கிவிட்டு, அதனை 3 பைகளில் அடைத்தனர். பின்னர் அங்கிருந்து ரெயில் மூலம் நேற்று அதிகாலையில் சென்னைக்கு வந்தனர். அங்கு ஏற்கனவே தாங்கள் நிறுத்தி வைத்திருந்த காரில் கஞ்சாவை வைத்துக்கொண்டு தஞ்சாவூருக்கு கடத்தி வந்தனர்.
சோதனைசாவடியில் காவல்துறையினர் மறித்ததால், சிக்கிவிடுவோம் என்று கருதிய 2 பேரும் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். காவல்துறையினர் எப்படியும் பிடித்துவிடுவார்கள் என்று நினைத்த அவர்கள், சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு கஞ்சாவை மறைத்து வைப்பதற்காக முட்புதரில் வீசி உள்ளனர். மேற்கண்ட தகவல் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து மலைச்சாமியை காவல்துறையினர் கைது செய்தனர். தப்பிச்சென்ற சிங்காரத்தை பிடிப்பதற்காக பண்ருட்டி காவல்துறையினர் தஞ்சாவூருக்கு விரைந்துள்ளனர். அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கஞ்சா வியாபாரியை நண்பர்களுடன் சேர்ந்து தைரியமாக பிடித்த ஊர்க்காவல் படை வீரர் முருகானந்தத்தை டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பாராட்டினார்.