தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அருகே உள்ள தொங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (63), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் மேல், சாமாண்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (50), என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. செந்தில்குமார் ஜெகநாதனிடமிருந்து காரை வாங்கியுள்ளார். பின்னர் ஜெகநாதனின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல தவணைகளாக ரூ.50 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஜெகநாதன் கேட்டபோது பணி ஆணை பெற்றதுபோல், ஒரு ஆவணத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.
பணத்தை திருப்பி கேட்டபோது தராமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக ஜெகநாதன் தர்மபுரி மாவட்ட சூப்பிரண்டு கலைச்செல்வனிடம் புகார் அளித்தார். அதில் தான் கொடுத்த ரூ.50 லட்சத்தையும், தனது காரையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்து செய்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து செந்தில்குமார் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.