‘சிலை திருட்டு குற்றங்கள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி திரு.பொன் மாணிக்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:செப் 27 மற்றும் அக் 1ல் நடத்திய அதிரடி சோதனையில் தொழில் அதிபர் ரன்வீர் ஷா, தன் சொகுசு பங்களா, பண்ணை வீடுகள் என பல்வேறு இடங்களில் கோவில் சிலைகளை பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை பறிமுதல் செய்தோம்.
அப்போது பத்திரிகைகளில் வந்த செய்தி ஒன்றில் சென்னை, ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில், ‘அமேதிஸ்ட்’ என்ற ஓட்டலை கிரண் என்பவள் நடத்தி வருகிறாள். அவளிடம் இருக்கும் சிலைகள் குறித்துஇ பொன் மாணிக்கவேலுவிடம் தெரிவித்து விடுவதாக மர்ம நபர்கள் 60 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளனர்.இது தொடர்பாக சுரேஷ்(26), ரைனிட் டைசன்(25) ஆகியோரை அண்ணா சாலை காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதன்பின் புழல் சிறையில் இருந்த சுரேஷ், ரைனிட் டைசனிடம் விசாரித்த போது தான் கிரண் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த சிலைகளை கண்டுபிடிக்க முடிந்தது.அண்ணா சாலை சட்டம் – ஒழுங்கு காவல்துறையினர் உடனடியாக தகவல் தெரிவித்து இருந்தால் கிரணை கைது செய்து இருப்போம்.
இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க எங்கு சிலை திருட்டு நடந்தாலும் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.