சென்னை: தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு சார்ந்த முக்கிய பணிகளை ஐபிஎஸ் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.
தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் காவல்துறை இயக்குநர் திரு.K.P.மகேந்திரன் ஐ.பி.எஸ் அவர்கள் தலைவராக கொண்டு செயல்பட்டு வருகின்றது.
தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பாக நேற்று உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கும், காவல் துறை இயக்குநர் திரு.T.K.ராஜேந்திரன், IPS அவர்களுக்கும் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் அனுப்பபட்டுள்ளது.
இக்கடிதத்தில் நேரடியாக பணியமர்த்தப்படும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதாக தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழக காவல்துறையில் இரண்டு வகைகளாக ஐ.பி.எஸ் உயர் அதிகாரிகள் பணியில் இருக்கின்றனர். இதில் ஒரு பிரிவினர், யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வு எழுதி நேரடி ஐ.பி.எஸ் அதிகாரிகளாக பணி அமர்த்த படுகின்றனர். அதன்படி நேரடி தேர்வு மூலம் தேர்வான 200 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பல்வேறு துறையில் காவல் அதிகாரிகளாக உள்ளனர்.
இரண்டாவது பிரிவினர் TNPSC குரூப் I தேர்வு எழுதி, TPS கேடரில் டிஎஸ்பி தேர்வாகி பின் பதவி உயர்வு பெற்று குறிப்பிட்ட காலத்திற்கு பின்னரே ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கபடுகின்றது.
அதில், IPS சர்வீஸ் விதிகள் 1954ன் படி, பணி நியமனங்களில் நேரடி ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற விதியை சுட்டிக்காட்டிஇ தமிழகத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பெரும்பாலானோர் சட்டம் ஒழுங்கு சார்ந்த முக்கிய பணிகளில் பணியமர்த்தப் படுவதில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நேரடி ஐ.பி.எஸ் அதிகாரிகளாக இல்லாத மற்ற காவல்துறை அதிகாரிகளே, தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சார்ந்த பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு பணிக்கு வரும் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்காமல், அவர்களின் திறனை வீணடிப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, ஐ.பி.எஸ் விதிகளுக்கு உட்பட்டு நேரடி ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.