தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியிடப்படுகிறது.
தமிழக காவல்துறையில் ஆயுதப்படையில் காலியாக உள்ள 5538 இரண்டாம் நிலை காவலர் பணியிடம், சிறைத்துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடம், தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 216 தீயணைப்போர் பணியிடம், 46 பின்னடைவு பணியிடம் என மொத்தம் 6140 காலிப்பணியிடங்களுக்கு கடந்த மார்ச் 11-ஆம் தேதி 232 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இத் தேர்வை சுமார் 3.20 லட்சம் பேர் எழுதினர்.
இப்போது விடைத்தாள் மதிப்பீடும் பணி தேர்வு குழுமத்தின் ஐ.ஜி.முன்னிலையில் நடைபெறுகிறது. இதில் விடைத்தாள் மதிப்பீடும் பணி முழுமையாக கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. விடைத்தாள் மதிப்பீடும் பணி, ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவடையும் என கூறப்படுகிறது. அந்த வாரமே எழுத்துத் தேர்வுக்கான முடிவை வெளியிடுவதற்கு தேர்வு குழும அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்திறன் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை மே மாதம் அடுத்தடுத்து நடைபெறுகிறது. இதில் தேர்வாகிறவர்களுக்கு ஜூன் மாதம் பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது