விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள உடையனாம்பட்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக கிளைச் செயலாளரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான ராக்கம்மாள், குடும்பப் பிரச்சினை காரணமாக உறவினர் ஒருவரால், கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். உடையனாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் மனைவி ராக்கம்மாள் (56). இவர் உடையனாம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். தற்போது அந்தப்பகுதியின் திமுக மகளிர் அணி பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் ராக்கம்மாளின் உறவினர் மூர்த்தி (42) என்பவருக்கும், அவரது மனைவி சோலை மணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தனது மனைவி பிரிந்து வாழ்வதற்கு ராக்கம்மாள் தான் காரணம் என்று நினைத்த மூர்த்தி, நேற்று மாலை ராக்கம்மாள் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். உயிருக்கு பயந்து தப்பியோடிய ராக்கம்மாளை விரட்டிச்சென்று மூர்த்தி கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராக்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த திருச்சுழி காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ராக்கம்மாளை படுகொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் மூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக திமுக கட்சியின் பெண் நிர்வாகி படுகொலையான சம்பவம், அந்தப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.