அரியலூர் : அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அத்தனேரி கிராமத்தை சேர்ந்த ஜெயராமனின், மகன் செந்தில்குமார் (48), இவரது சித்தப்பா மனைவி இந்திராணிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இந்திராணியின் சொத்துக்களை விற்க ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கேள்விப்பட்ட செந்தில்குமார், தனது சித்தியிடம் ஏன் சொத்துக்களை விற்க ஏற்பாடு செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அப்போது இந்திராணியுடன் இருந்த அவரது தம்பி மற்றும் உறவினர்கள், செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த செந்தில்குமார், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் காவல் துறையில் செந்தில்குமார், கொடுத்த புகாரின்பேரில் அத்தனேரி கிராமத்தை சேர்ந்த மதியழகன், அவரது மனைவி கவிதா மதியழகன், மகன்கள் தன்ராஜ், மணிவேல் ஆகியோர் மீது உதவி ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.