கோவை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் மால் செயல்பட்டு வருகிறது. இந்த மாலின் வளாகத்தில், உணவு மையம் உள்ளது. இங்கு செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த பாலாஜி செல்வராஜ் (32), என்பவர் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், அங்கு நடைபெறும் கணக்கு வரவு, செலவுகளை நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 289 மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில், அங்கு கணக்காளராக பணியாற்றிய பாலாஜி செல்வராஜ் உரிய கணக்கை காட்டாமல் மோசடியில், ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் கேட்டபோது அவர் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் உணவக மேலாளர் அஸ்வின் பாலா இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் துறையில், புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர், பாலாஜி செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.