ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தயிர்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (51). இவருடைய மனைவி மீனா என்கிற சகாயமேரி (40). இவர்கள் 2 பேரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தாக கூறப்படுகிறது. இவர்களிடம் அந்த பகுதியை சேர்ந்த பலர் சீட்டு பணம் கட்டி வந்தனர்.
இந்த நிலையில் கொத்தமங்கலம் நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த மல்லிகா உள்ளிட்ட 6 பேர் பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், ‘சின்னசாமி மற்றும் அவருடைய மனைவி சகாயமேரி ஆகியோர் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தினர். இதில் நாங்களும் உறுப்பினர்களாக சேர்ந்து சீட்டுக்கு பணம் செலுத்தினோம். இந்த நிலையில் கணவன், மனைவி 2 பேரும் சேர்ந்து ஏலம் கூறி எடுத்த எங்களுடைய சீட்டுக்கு பணம் தராமல் இழுத்தடித்து வருகிறார்கள்.
இதன்மூலம் அவர்கள் 2 பேரும் ரூ.12 லட்சம் மோசடி செய்து உள்ளனர். எனவே அவர்கள் 2 பேரிடம் இருந்து எங்களுடைய பணத்தை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சின்னசாமியும், சகாயமேரியும் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.