சென்னை : சென்னை, செம்மஞ்சேரி பகுதியில் வசிக்கும் 18 வயது சிறுமி, சின்னமலை பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து வருகிறார். மேற்படி மாணவியை வெட்டுவாங்கேணி பகுதியைச்சேர்ந்த முகேஷ் என்பவர் 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மேற்படி மாணவி முகேஷிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் 30.03.2022 அன்று காலை 8.45 மணியளவில் மேற்படி மாணவி பள்ளி செல்வதற்காக வேளச்சேரி, செக்போஸ்ட் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த முகேஷ் மற்றும் அவது நண்பர் சையத் மசூத் ஆகிய இருவரும் மேற்படி பள்ளி மாணவியிடம் சென்று, பேச சொல்லியும், காதலிக்க வற்புறுத்தியும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மாணவி பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த முகேஷ் மாணவியை ஹெல்மட்டால் தாக்கியுள்ளார். அருகிலிருந்த மாணவர்கள் சத்தம்போடவும் முகேஷ் மற்றும் அவரது நண்பர் சையத் மசூத் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். பின்னர் இருவரும் காலை 11.00 மணியளவில் மாணவி பயிலும் பள்ளி வளாகத்திற்கு சென்று தகராறு செய்துள்ளனர். இது குறித்து மாணவி கிண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1) முகேஷ் (வ/22) வெட்டுவாங்கேணி அவரது நண்பர் 2) சையத் மசூத் (வ/23) சைதாப்பேட்டை ஆகிய இருவரை கைது செய்தனர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.