சென்னை : சென்னை தலைமை செயலகத்தில், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு, நேற்று மதியம் 1:30 மணிக்கு, முதல்வர் திரு. ஸ்டாலின், காரில் புறப்பட்டார். அவரது காருடன் கான்வாய் வாகனங்கள் சென்றன. உடன் பாதுகாவலர்களும் சென்றனர். முதல்வர் கான்வாய் செல்லும் வழியில், பாதுகாப்பு காரணமாக, மற்ற வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலை, நேப்பியர் பாலம் அருகே, முதல்வர் கான்வாயை, பதிவு எண் இல்லாத ‘ஆக்டிவா’ இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் முந்த முயன்றார். இதை பார்த்த பாதுகாவலர்கள், அந்த வாலிபரை எச்சரித்தனர்.
கான்வாயில் சென்ற பாதுகாவலர்கள் எச்சரித்தும், கான்வாயை முந்திச் செல்ல முயன்றதை அடுத்து, அங்கிருந்த போக்குவரத்து காவல்துறையிடம், தகவல் தெரிவித்தனர். அதற்குள் அந்த வாலிபர், திடீரென வாலாஜா சாலை வழியாக வாகனத்தை திருப்பினார். போக்குவரத்து காவல்துறையினர் , அவரை விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர். பின், அவரை கோட்டை காவல்துறையிடம், ஒப்படைத்தனர். விசாரணையில், தேனாம்பேட்டை தாமஸ் ரோடு, இரண்டாவது பிளாக் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், (20), என தெரிய வந்தது. மேலும், தி.நகரில், வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆக்டிவா வாகனத்தை திருடி, தப்பிக்க முயன்றது, தெரியவந்தது. அஜித்குமார் கைது செய்யப்பட்டார்.