சென்னை : சென்னை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் விவேக்குமார் (24), இவர், சென்னையில், உள்ள தனியார் நிறுவனத்தில், பணியாற்றிய போது, மணிகண்டன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. சமீபத்தில், அவரை மணிகண்டன் செல்போனில் தொடர்புக்கொண்டு, “தற்போது நான் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில், பணியாற்றி வருகிறேன். இந்த நிறுவனத்தில், பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும்” என்று மணிகண்டன் ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பி கடந்த ஏப்ரல் மாதம் விவேக், சென்னை வந்தார். எழும்பூர் ரெயில் நிலையத்தில், மணிகண்டன், அவரது நண்பர் மற்றொரு மணிகண்டன், சிவநேசன், அன்புமணி, காளிதாஸ் ஆகியோரை சந்தித்தார். பின்னர் சிவநேசன் வங்கி கணக்கில், 2 தவணையாக ரூ.3 லட்சத்தை செலுத்தினார்.
ஆனால் அவர்கள் சொன்னபடி பணத்தை தரவில்லை. இந்த நிலையில் விவேக், மணிகண்டனை நேரில் சந்தித்து பணத்தை கேட்டார். அப்போது மணிகண்டன் பணம் தர மறுத்ததுடன், கொலைமிரட்டலும் விடுத்தார். இதுதொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில், விவேக் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முகாசபரூர் பகுதியை சேந்த மணிகண்டன் (24), மற்றொரு மணிகண்டன் (29), ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், 2 விலையுயர்ந்த செல்போன்கள், ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக இது போன்று பல இளைஞர்களிடம் பண மோசடியில், ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிவநேசன், அன்புமணி, காளிதாஸ் ஆகியோரை தனிப்படைகாவல் துறையினர், தேடி வருகிறார்கள்.