புதுடெல்லி: தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 66 லட்சம் பேருக்கு பேரிடர் கால விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கடந்த 2006ம் ஆண்டு முதல் தேசிய பேரிடர் மீட்புப்படை இயங்கி வருகிறது. 12 பட்டாலியன்களாக உள்ள இதில், 13 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள். பேரிடர் மீட்புப்படை துவக்கப்பட்டதில் இருந்து இதுவரை 66 லட்சம் பேருக்கு பேரிடர் கால விழிப்புணர்வு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படையின் இயக்குனர் ஜெனரல் சஞ்சய் குமார் கூறியதாவது:
பேரிடர் காலங்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சமுதாய விழிப்புணர்வு, பள்ளி பாதுகாப்பு, நடைமுறையில் உள்ள பயிற்சிகள் மற்றும் ஒத்திகை பயிற்சிகள் என 4 வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
நாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் நடத்தப்பட்ட இந்த பயிற்சியின் மூலமாக இதுவரை 66 லட்சத்து 27 ஆயிரத்து 69 பேர் பயன் அடைந்துள்ளனர். 10 ஆயிரத்து 193 முறை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
எதிர்பாராத விதமாக மனிதரால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகளை எவ்வாறு திறம்பட கையாளுவது என்பது குறித்தும் கற்றுத் தரப்பட்டுள்ளது. எவற்றை செய்ய வேண்டும், எவற்றை செய்யக்கூடாது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தேசிய பேரிடர் மீட்புப்படை மூலமாக நாடு முழுவதும் இதுவரை 2091 மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த படைகள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.