சென்னை: காவல் துறையை அழைக்க 100, தீயணைப்புத்துறைக்கு 101, சுகாதாரத்துறைக்கு 108, பெண்கள் பாதுகாப்புக்கு 1090 என்பன உட்பட பல்வேறு சேவைகளுக்கு பல்வேறு உதவி அழைப்பு எண்கள் உள்ளன.
இந்நிலையில், அனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி அழைப்பு எண்ணாக 112 என்ற எண், ஏற்கனவே ஹிமாச்சலப் பிரதேசம், நாகாலாந்தில் வழக்கத்தில் உள்ள நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும், மும்பையிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமாச்சல பிரதேசம், அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான நிகோபர் தீவுகள், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையு, ஜம்மு காஷ்மீர் மற்றும் நாகலாந்து உள்ளிட்டவை அவசர அழைப்பு எண் 112-ல் இணைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 112 இந்தியா என்ற மொபைல் செயலியையும் உள்துறை அமைச்சகம் கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலியில் ஆபத்துக்குள்ளாகும் பெண்கள், அருகாமையில் உள்ள பதிவு பெற்ற தன்னார்வலர்களை உதவிக்கு அழைக்கும் வகையில், அபாய ஒலி எழுப்பும் வசதியும் இடம் பெற்றுள்ளது. 112 ஹெல்ப் லைனின் பதற்ற கால அவசர அழைப்பு வசதியும் அறிமுகப்படுத்துகிறது.
ஸ்மார்ட் ஃபோன்களில் பவர் பட்டனை அடுத்தடுத்து மூன்று முறை அழுத்தினாலோ, சாதாரண செல்ஃபோன்களில் 5 அல்லது 9 என்ற எண்களை நீண்ட நேரம் அழுத்தினாலோ அவசரகால அழைப்பு மையத்துக்கு தகவல் சென்று விடும். அவசரகால அழைப்பு மையத்தில் உள்ள பயிற்சி பெற்ற ஊழியர்கள் காவல்துறை, தீயணைப்புத்துறை சுகாதார உதவிக் குழுக்களை தொடர்பு கொண்டு அவசர சேவைகளை உடனடியாக மேற்கொள்ள வழிவகை செய்வார்கள்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
K.ஐசக் டேவிட்
திருவள்ளூர் மாவட்ட தலைவர் (சமூக சேவை பிரிவு)
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா