ஆங்கிலேய ஆட்சிக்கு முன்புவரை சிறந்த காவல் முறை இருந்துள்ளது. அரசர்கள் சேனதிபதிகள் மூலம் நாட்டை காத்து வந்தனர். 1540-1555 ஆண்டுகளில் ஷெர்ஷா மன்னன் ஆட்சி காலத்தில் மாபெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. முதன்முதலாக காவல்துறைக் கோட்பாடுகள் வடிவமைக்கப்பட்டன. முகலாய மன்னர்கள் நிலையான நீதிமுறையை பிக்னி-பெரோஸ் மற்றும் பாட்வா-யி-ஆலம்கிரி என்ற சட்ட வடிவமைப்பைக் கொண்டு சட்டம்-ஒழுங்கு நிலை நாட்டப்பட்டது.கிராம கவுன்சிலால் காவல் பொறுப்பை பார்த்துக் கொண்டனர்.
ஜமீந்தார்கள் காலத்தில், மணியக்காரர்கள் மற்றும், தலையாரிகள் இரவு ரோந்து, குற்றவாளிகலைப் பிடித்தல், சந்தேக நபர்களைப் பிடித்தல் போன்ற பணிகளை செய்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1787-ஆம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங் காலத்தில் காவல் கண்காணிப்பாளர்களை வங்காளம், ஒரிசா மாநிலங்களுக்கு நியமித்தது. பெண்டிங் பிரபு காலத்தில் வருவாய் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு 1816-முதல் பொது காவல் முறை கொண்டுவரப்பட்டது.
காவலர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்ததால், 1859 ஆண்டு முதல் காவல் பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 1861-ஆம் ஆண்டு இந்திய போலீஸ் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி மாவட்டம் தோறும் காவல்துறை இயங்க வழிவகை செய்யப்பட்டது. 1902-ஆண்டு காவல் ஆணைக் குழுவின் பரிந்துரையின் படி தற்போதுள்ள காவல்முறை வந்தது.
மெக்காலே என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், 1860 ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. பின் 1872-ஆம் ஆண்டு இந்திய சாட்சியச் சட்டம், மற்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் அமலுக்கு வந்த பின் நாடு முழுதும் ஒருங்கிணைந்த சட்ட ஒழுங்கிற்கு வழிவகை செய்தது.
1935-இந்திய சாசனச் சட்டப்படி, காவல்துறை அந்தந்த மாநிலத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் வெள்ளையரின் முகவராக மட்டும் இருந்துவந்தனர் காவலர்கள். வெள்ளையர் இட்ட ஆணையை கண்மூடி செய்யும் ஆட்களாக இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின் அரசின் முகவராகவும், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்களாகவும், இந்த சமுதாயத்தின் பிரதிநிதியாகவும், மக்களின் சேவகர்களாகவும் இருக்கின்றார்கள்.
காவல்துறை என்பது ஒரு மாகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இவற்றின் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தல், குற்றவிசாரணை புரிதல், பொதுமக்களைப் பாதுகாத்தல், கூட்டத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற பணிகளும் இத்துறையால் செய்யப்படும். இவ்வமைப்பின் அதிகாரவரம்பு நாட்டுக்கு நாடு வேறுபடும். பொதுவாக தேசிய எல்லை, மாநில எல்லை, மற்றும் சர்வதேச அளவிலும் என்று வகைப்படுத்திப் பிரிக்கலாம்.
பொதுவாக கூட்டாட்சி அமைப்புள்ள நாடுகளில், பல அடுக்குகளில் காவல் துறை செயல்படும். இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளில் காவல் துறை அதிகாரம் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிலி, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஆஸ்திரியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஒருங்கிணைந்த அதிகாரம் அமைப்பாகவுள்ளது. பல சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து பன்னாட்டுக் காவலகம் என்ற அமைப்பையும் உருவாக்கி, நாடுகளுக்கிடையேயான உதவிகளைப் பரிமாரிக்கொள்கிறது.
இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை ஆட்சிக்கு பின்னர் அமைந்த ஜனதா ஆட்சி தேசியக் காவல் ஆணையத்தை நியமித்தது. காவல் துறையைச் சீர்திருத்தவும் புதிய காவல் சட்டம் கொண்டுவரவும் இந்த ஆணையம் கோரப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்களில் இந்த ஆணையம் வெவ்வேறு தலைப்புகளில் விரிவான, ஆழமான எட்டு அறிக்கைகளை அரசுக்குக் கொடுத்தது. ஆனால், 1980ல் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்ததும், ஆணையம் காலாவதியாயிற்று. 16 வருடங்கள் கழித்து 1996-ல் முன்னாள் காவல் துறைத் தலைவர்கள் பிரகாஷ் சிங், என்.கே. சிங் இருவரும் ‘இந்த அறிக்கைகளை அரசு செயல்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இரண்டு வருடங்கள் கழித்து காவல் அதிகாரி ரிபெய்ரோ தலைமையில் ஒரு குழுவை அமைத்தது நீதிமன்றம். அது அறிக்கை கொடுத்தது. மறுபடியும் 2000-ல் பத்மநாபய்யா குழு அமைக்கப்பட்டது. அடுத்து 2006-ல் சொலி சொராப்ஜி குழு அமைக்கப்பட்டது. எல்லாக் குழுக்களும், அறிக்கைகளும் பரிந்துரைகளும் கொடுத்தன.
உச்ச நீதிமன்றத்தின் ஏழு கட்டளைகள்
2006-ல் உச்ச நீதிமன்றம் ஏழு கட்டளைகளை அறிவித்து அவற்றை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அவை
- மாநிலப் பாதுகாப்பு ஆணையம் அமைத்து, அரசு காவல் துறை மீது செல்வாக்கும் நிர்ப்பந்தமும் செலுத்தாமல் பார்க்க வேண்டும்.
- தலைமைப் பதவியான டி.ஜி.பி. நியமனம் வெளிப்படையானதாகவும் பதவிக் காலம் குறைந்தபட்சம் இரு வருடங்களாகவும் இருக்க வேண்டும்.
- எல்லா உயர் அதிகாரிகளும், காவல் நிலைய அதிகாரிகளும் குறைந்தது இரு வருடம் பொறுப்பில் இருக்க வேண்டும்.
- சட்டம் – ஒழுங்கு பொறுப்பையும் குற்றப் புலனாய்வுப் பொறுப்பையும் தனித் தனிப் பிரிவுகளாக்க வேண்டும்.
- காவலர்கள் அனைவரின் நியமனம், இட மாற்றம், பதவி உயர்வு, இதர நடவடிக்கைகள் அனைத்தையும் சுயேச்சையான காவல் நிர்வாக வாரியம் அமைத்து மேற்கொள்ள வேண்டும்.
- காவலர்கள் யார் மீதான புகார்களானாலும், அவற்றை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாநில, மாவட்ட அளவிலான புகார் ஆணையங்களை ஏற்படுத்த வேண்டும்.
- மாநில அரசுகளைப் போலவே மத்திய அரசு கீழ் இருக்கும் காவல் பிரிவுகளுக்கும் சுயேச்சையான தேசியப் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும்.
இந்த ஒவ்வொரு கட்டளையையும் எப்படிச் செயல்படுத்த வேண்டும், யாரை உறுப்பினராக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஓரளவு விரிவாகவே சொல்லியிருக்கிறது.
ஒரு வருடம் கழித்து நிலைமை என்னவென்று நீதிமன்றம் கேட்டால், பல மாநிலங்கள் பதிலே தரவில்லை. சில அரசுகள் அவகாசம் கேட்டன. சில அரசுகள் சொன்னபடி செய்துவிட்டதாக, சில அரசாணைகளை வெளியிட்டன. நீதிமன்ற உத்தரவை அவமதித்ததற்காக குஜராத், தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் மீது மனுதாரர் பிரகாஷ் சிங் வழக்குத் தொடுத்தார். தொடர்ந்து, அரசுகள் கால அவகாசம் கேட்டன. 2008-ல் நீதிமன்றம் மாநில அரசுகள் செய்த நடவடிக்கை என்ன என்று ஆராய கண்காணிப்புக் குழுவை நியமித்தது. கடைசியாக, 2013 ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் வழக்குகளை விசாரித்தது. எந்தெந்த மாநிலங்கள் எந்த அளவுக்குத் தன் ஏழு கட்டளைகளைச் செயல்படுத்தியுள்ளன என்பதையும், தன் தீர்ப்புக்குப் பின்னர் போடப்பட்ட சட்டங்கள் செல்லுமா என்றும் நீதிமன்றம் விசாரித்துவருகிறது.