சமூக வலைத்தளங்கள் மூலம் குற்றச்சம்பவங்களை தடுக்க சென்னை காவல் ஆணையர் திரு.கரன் சின்கா திட்டமிட்டார். அதன்படி பொதுமக்கள் உடனடியாக புகார் அளிப்பதற்காக வசதியாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ‘வாட்ஸ்–அப்’ குரூப் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள்–காவல்துறையினர் உறவாடும் குழு என்ற பெயரில் ‘வாட்ஸ்–அப்’ குரூப் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சட்டம்–ஒழுங்கு ஆய்வாளர்கள் ‘வாட்ஸ்–அப்’ குரூப் அட்மினாக இருப்பார்கள்.
இதில் குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், உதவி-ஆய்வாளர்கள், ரோந்து காவல்துறையினர் இடம் பெறுவார்கள். குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள், வங்கி மேலாளர்கள், பள்ளி–கல்லூரி முதல்வர்கள், நகைக்கடை உரிமையாளர் சங்க நிர்வாகிகள், வணிக வளாகம், ஓட்டல்கள் பாதுகாப்பு பிரிவு மேலாளர்கள், திரையரங்கு மேலாளர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், மூத்த குடிமக்கள், ஓய்வு பெற்ற காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள்.
காவல் உதவி ஆணையர்கள், துணை ஆணையர்கள் நேரடி கண்காணிப்பில் ‘வாட்ஸ்–அப்’ குரூப் இயங்கும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை 11.30 மணிக்கு ‘வாட்ஸ்–அப்’ குரூப்பின் செயல்பாடு குறித்து ஆணையர் ஆய்வு மேற்கொள்வார்.
எனவே ‘வாட்ஸ்–அப்’பில், குற்ற சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பலாம். புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு குற்றங்கள் களைய நடவடிக்கை எடுக்கப்படும். ‘வாட்ஸ்–அப்’ எண் குறித்த விவரங்களை காவல் நிலையங்களில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே காவல் அதிகாரிகள் சார்பில் ‘வாட்ஸ்–அப்’ குரூப் உருவாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.