சென்னை: சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, தட்டாங்குளம் தெருவில் சாவித்திரி, (வயது.38/2020ம் ஆண்டு) என்பவர் அவரது கணவர் ரவி என்பவருடன் வசித்து வந்தார். ரவி மது பழக்கத்திற்கு அடிமையாகி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 28.03.2020 அன்று இரவு மேற்படி வீட்டில் சாவித்திரி இருந்தபோது, ரவி அவரது மனைவி சாவித்திரியிடம் தகராறு செய்து, சாவித்திரியை சுத்தியலால் தாக்கி கொலை செய்தார். இது குறித்து இறந்து போன சாவித்திரியின் சகோதரி கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்த தின்பேரில், கொலை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை செய்து, எதிரி ரவி (வ/42/2020ம்ஆண்டு) பழைய வண்ணாரப்பேட்டை என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 07.04.2022 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் எதிரி ரவி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ரவிக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.3,000/- அபராதமும் தண்டனை விதித்து கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.