சென்னை: கடந்த 2016ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி (பெ/25) என்பவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அப்பொழுது அவருடன் பணிபுரிந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தகுமார் என்பவர் சிவரஞ்சனியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்ததால், சிவரஞ்சனி அங்கு வேலையை விட்டு நின்றுவிட்டார். எனினும் 27.10.2016 அன்று சிவரஞ்சனி அவரது சொந்த ஊருக்கு செல்ல, கோயம்பேடு பேருந்து முனையம் அருகில் நடந்து செல்லும்போது, அரவிந்தகுமார் சிவரஞ்சனியை காதலிக்குமாறு வற்புறுத்தியபோது, சிவரஞ்சனி மறுக்கவே, அரவிந்தகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவரஞ்சனியை தாக்கிவிட்டு தப்பிச்சென்றார்.
முகம் மற்றும் கைகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு மயக்கமடைந்த சிவரஞ்சனியை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேற்படி சம்பவம் குறித்து சிவரஞ்சனி கொடுத்த புகார் மீது CMBT காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, எதிரி அரவிந்தகுமார் (வ/32) திருப்பூர் மாவட்டம் என்பவரை 28.10.2022 அன்று கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
இவ்வழக்கு தொடர்பாக சென்னை, அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், CMBT காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து 04.04.2022 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் எதிரி அரவிந்தகுமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி அரவிந்தகுமார் என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,500/- அபராதம் விதித்து கனம் மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த CMBT காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.