சென்னை : சென்னை, மணலிபுதுநகரைச் சேர்ந்தவர் பாக்யராஜ், (32), தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி பவானி, (29), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இருவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, மற்றும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில், பவானி மிகுந்த ஆர்வமாக இருந்தார். தன், 20 சவரன் தங்க நகைகளை விற்றும், இரு தங்கைகளிடமிருந்து, 11 லட்சம் ரூபாய் கடன் வாங்கியும், ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக 11 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டு மின்விசிறியில், புடவையால் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பவானியை பரிசோதித்த மருத்துவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து, மணலிபுதுநகர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.