செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் காவல்துறையினரிடம் சிக்கினார். ஆந்திர காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள மலைப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்களை கடத்தல் கும்பல் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கிறார்கள். அவர்களை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
செம்மரக்கடத்தல் தொடர்பாக கடந்த 2015–ம் ஆண்டு பர்மாவை சேர்ந்த சர்வதேச கடத்தல் மன்னன் லட்சுமணன் என்பவரை சித்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
கைதான லட்சுமணனின் காதலி சங்கீதா சட்டர்ஜி (26). இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றியவர். அவரை லட்சுமணன் 2–வது திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
செம்மரக்கடத்தலில் போலீசாரிடம் லட்சுமணன் சிக்கியதால் சங்கீதா சட்டர்ஜி தனது கணவரின் தொழிலான செம்மரக்கடத்தலில் ஈடுபட்டார். அவர் செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்து வந்தார். பலரை துப்பாக்கியால் மிரட்டி செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு கோடிகோடியாக பணம் சம்பாதித்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன் அவரை கைது செய்ய ஆந்திர போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
வங்கி லாக்கர் முடக்கம்
அவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், சங்கீதா சட்டர்ஜியை முன்ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று 30–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கொல்கத்தா கோர்ட்டில் மனு செய்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இதனால் அவரை கைது செய்ய முடியாமல் ஆந்திர காவல்துறையினர் திணறினர்.
ஆனாலும் காவல்துறையினர் அவரது வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை முடக்கினர். வங்கி லாக்கரை காவல்துறையினர் சோதனை போட்டபோது அதில் இருந்த பலகோடி மதிப்புள்ள தங்கநகைகள், போலி துப்பாக்கி லைசென்சு, லேப்–டாப், செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆனால் அதன்பின்னரும் சங்கீதா சட்டர்ஜி செம்மரக்கடத்தல் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். முன்ஜாமீன் முடிந்த பின்னரும் அவர் சரண் அடையாமல் இருந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து ஆந்திர காவல்துறையினர் விமான பணிப்பெண் சங்கீதா சட்டர்ஜியை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவர் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சித்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கிரிதர் தலைமையில் தனி காவல் படையினர் கொல்கத்தா சென்று சங்கீதா சட்டர்ஜியை கைது செய்தனர். அவரது வீட்டை காவல்துறையினர் சோதனை நடத்தி அங்கு இருந்த கோடிக்கணக்கான சொத்து பத்திரங்கள் மற்றும் போலி துப்பாக்கி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
சங்கீதாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் சித்தூருக்கு கொண்டு வந்தனர். அவரை காவல்துறையினர் நேற்று சித்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.