கடலூர்: புதுச்சேரியில் இருந்து மது கடத்தி வருவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின் பேரில் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வேதரத்தினம் மேற்பார்வையில், துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.நரசிம்மன், திரு.குமார் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சை நிறுத்தி அதில் ஏறி பயணிகளின் உடைமைகளை காவல்துறையினர் சோதனை செய்தனர். இதில் ஒருவர் வைத்திருந்த 2 பைகளில் 4 பொட்டலங்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது காய்ந்த கஞ்சா இலைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரை காவல்துறையினர் பிடித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கொட்டோடப்பட்டியை சேர்ந்த ஜெயராமன்(36) என்பது தெரியவந்தது. மேலும் ஆந்திர மாநிலம் அனகாபள்ளி என்ற ஊரில் இருந்து 7½ கிலோ கஞ்சாவை ரூ.18 ஆயிரத்துக்கு வாங்கி கடலூர் வழியாக நாகப்பட்டினத்துக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.7½ லட்சம் என கூறப்படுகிறது.
பின்னர் ஜெயராமனை விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் புதுநகர் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.