கோவை : மதுக்கரை அருகேயுள்ள, குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பிரபு, (36), ஆட்டோ ட ஓட்டுநர். குடிப்பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் இரவு இவர் அப்பகுதியில், அரசு துவக்கப்பள்ளி அருகேயுள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டியின் மேல் பகுதிக்கு ஏறினார். இதனை கண்ட அங்கிருந்தோர், கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். மறுத்த பிரபு, கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக, மிரட்டினார். தகவலறிந்த மதுக்கரை காவல் துறையினர், அங்கு சென்றனர். மேலே ஏற முயன்றோர் மீது, கற்களை வீசி தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை மீண்டும் காவல் துறையினர், பிரபுவிடம் பேசினர். சமாதானமடைந்த பிரபு கீழே இறங்க, சம்மதித்தார். தொடர்ந்து மேலே சென்ற காவல் துறையினர், பிரபுவை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். இனிமேல் இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது , என அறிவுறுத்தி அனுப்பினர்.