சென்னை : வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ், (35), அ.தி.மு.க., பிரமுகர். இவர், நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்களான பூந்தமல்லியை சேர்ந்த அபிஷேக் ஜேக்கப், (31), யாசின், (31), ஆகியோருடன் யாசினின் காரில் சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். காரில் சதீஷுக்கு சொந்தமான 13 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. பூந்தமல்லியில் இருந்து வரும் வழியில், பணத்தை நாளை வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டு, சதீஷ் விருகம்பாக்கம் அருகே காரில் இருந்து இறங்கியுள்ளார். பின், அபிஷேக் ஜேக்கப், யாசின் இருவரும் நண்பர் ஒருவருக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக சேத்துப்பட்டு தனியார் மருத்துமனையின் வெளியே காரை நிறுத்தி சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது, பணம் திருடுபோனது தெரியவந்தது. ஆனால், காரின் கண்ணாடியோ, கதவோ உடைக்கப்படவில்லை. இது குறித்து சேத்துப்பட்டு காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.