நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, அருகே முன்னாள் முதலமைச்சர் திருமதி. ஜெயலலிதா அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 24- 4 -2017 ஆம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார், மற்றொரு காவலாளி கிருஷ்ணதாபா, படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான் மனோஜ் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். கொலை மற்றும் கொள்ளை குறித்து முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் சசிகலாவிடம் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. திரு. சுதாகர், தலைமையில் போலீசார் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். இதனிடையே கொடநாடு, பங்களாவில் மரவேலைப்பாடுகள் செய்த பர்னிச்சர் கடையின் உரிமையாளரும், அதிமுக நிர்வாகியுமான சஜீவனிடம், நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் 6 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர் , இதில் தனிப்படையினர் சஜீவனிடம், பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதையடுத்து நேற்று 2-வது நாளாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் தனிப்படையினர் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர், அப்போது கொடநாடு பங்களாவில் கொள்ளை அடித்துவிட்டு நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக கேரளாவுக்கு தப்பிய கும்பல் ,குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.