பெரம்பலூர் : பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்களுக்கு பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி துவக்க நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை வகித்து பயிற்சியை தொடங்கிவைத்து பேசுகையில், கரோனா பெருந்தொற்று காலத்தில் பயிற்சிகள் வழங்குவதில் இருந்த தொய்வினை போக்கும் வகையில் அரசு அலுவலர்களுக்கான பயிற்சிகளை விரைந்து வழங்கிட மாவட்ட அளவில் பயிற்சி முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களுக்கு பவானிசாகரில் வழங்கப்படும் அதே பயிற்சி 45 நாட்கள் இங்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் எவ்வித தொய்வும் இன்றி தினந்தோறும் வழங்கப்பட உள்ளது.
அரசு அலுவலர்களிடம் பணிபுரிய ஏற்கனவே பல்வேறு திறமைகள் உள்ளது. அதனை மெருகேற்றும் வகையில் இந்த பயிற்சி உங்களுக்கு உதவும், இந்த வாய்ப்புகளை அலுவலர்கள் திறம்பட பயன்படுத்தி கொள்ள வேண்டும். இப்பயிற்சி உங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதுடன் பல்வேறு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பழகி தோழமை உணர்வினை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும். அலுவலர்கள் இயல்பாக, எளிமையாக, எவ்வித அழுத்தமும் இன்றி பணியாற்றிட இப்பயிற்சி வாய்ப்பாக அமையும். பொதுவாக மக்களுக்கு கல்வி பொருளாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பணியே அரசு பணியாகும். அரசு எந்திரம் இயல்பாகவும் வேகமாகவும் சரியாகவும் செயல்பட இதுபோன்ற பயிற்சிகள் ஒரு தளமாக அமையும்.
ஒவ்வொரு பணிகளிலும் அதற்கு ஏற்றவாறு பொறுப்பு இருக்கும். அவைகளைத் திறம்பட செய்வதன் மூலமே வெற்றி பெற முடியும். அதுவே ஒவ்வொரு அலுவலருக்கும் உயர்வை கொடுக்கும். எனவே இப்பயிற்சியை சிறப்பான வாய்ப்பாக பயன்படுத்தி உங்களது திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.கூட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் செயலாளர் நீலராஜ், பவானிசாகர் பயிற்சி நிறுவன முதல்வரும், டிஆர்ஓவுமான சாதனைக்குரல், ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், துணை கலெக்டர் ஜெயராம் மற்றும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.