அரசுப் பேருந்தில் காவல்துறையினர் இலவசமாக பயணம் செய்ய முடியாது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் போக்குவரத்து அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். அரசுப் பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணம் செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது.
இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பேருந்துகளில் காவல் துறையினரின் இலவச பயணம் குறித்து, ஈரோட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் போக்குவரத்துத் துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு வாரண்ட் அனுமதியில்லாமல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் நிறுவனப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி இல்லை.
மேலும் அவர்கள் பணிநிமித்தம் அல்லாமல் சொந்த தேவைகளுக்கோ, பணிக்கு வரும்போதோ, வீடு திரும்பும் போதோ வாரண்ட் இல்லாமல் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இல்லை என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.