அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை இயக்குநர்களின் (டிஜிபி) மாநாடு மத்தியபிரதேசத்தில் உள்ள தேகன்பூரில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், இம்மாநாட்டின் இறுதி நாளான 9.1.2017 அன்று, பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
உலக அளவில் தகவல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் அனைத்துத் துறைகளையும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தொழில்நுட்பத்தை இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் இன்றைய உலகம் இயங்கி வருகிறது. இது நல்ல மாற்றமாக இருந்தாலும், அதே தொழில்நுட்பத்தால் மனித குலத்திற்கு பெரிய அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கிறது.
கணினிமயமான இந்த உலகில், இணையவழி அச்சுறுத்தல் என்பது ஒரு தனிநபர் மட்டுமின்றி உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக மாறியிருக்கிறது. இது மிகவும் தீவிரமான பிரச்சினையாகும்.
எனவே, இணையவழி அச்சுறுத்தல்களுக்கு காவல்துறையினர் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும், அதுதொடர்பாக விரைவான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். அதேபோல், இளைஞர்களை இணையவழியில் தீவிரவாதத்தின் பாதைக்கு கொண்டு செல்வதையும் தடுக்க வேண்டும்.
பாதுகாப்பு விவகாரங்கள், கறுப்புப் பணம் குறித்த தகவல்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதில் உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் பங்கு அளப்பரியது. நாடுகளுக்கு இடையே தற்போது வெளிப்படைத் தன்மை உருவாகியிருக்கிறது.
அதுபோல, பாதுகாப்பு விவகாரங்களில் நம் நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயும் வெளிப்படைத் தன்மை அதிகரிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பில் உச்சத்தை தொடுவதற்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமை இன்றியமையாதது. இதனை மனதில் வைத்து காவல் துறையினர் இயங்க வேண்டும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.
சிறப்பாக பணியாற்றிய உளவுத்துறை அதிகாரிகளுக்கு இந்த நிகழ்ச்சியில் மோடி பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர்கள் ஹன்ஸ்ராஜ் அஹிர், கிரண் ரிஜிஜு ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.