கடலூர்: கடலூர் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் தலைமை தாங்கி பேசினார்.
விநாயகர் சிலை வைப்பவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் சிலை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சிலை பாதுகாப்புக்கு 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். விநாயகர் ஊர்வலத்தின் போது பொதுமக்கள் மீது கலர் பொடி வீசுவதோ, தண்ணீரை பீய்ச்சி அடிக்கவோ கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாலை 5 மணிக்குள் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஊர்வலத்தில் அடையாளம் தெரியாத நபர்களை அனுமதிக்கக்கூடாது. ஊர்வலத்தில் பங்கேற்பவர்களின் பெயர், விலாசம் தெரிந்திருக்க வேண்டும். ஊர்வலம் வரும் வழியில் தேவையில்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தக்கூடாது. உள்ளூர் பிரச்சினை இருந்தால் காவல்துறையினரிடம் முன்கூட்டியே தகவல் சொல்ல வேண்டும்.
இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் பேசினார். கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல், பாரதீய ஜனதா கட்சி நகர தலைவர் வெங்கடேசன், உதவி காவல் கண்காணிப்பாளர் நிஷா, துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.நரசிம்மன், திரு.பாண்டியன், திரு.ஈஸ்வரன், திரு.அருள்சந்தோஷ்முத்து, திரு.ஷாகுல் அமீது, திரு.சிட்டிபாபு, திரு.சுந்தரவடிவேலு, திரு.வெங்கடேசன் மற்றும் காவல்துறையினர், விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவினர், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.