கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் தாசில்தார் ரத்தினாவதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவத்தன்று மாலை வேப்பூர் கூட்டுரோடு விருத்தாசலம்-சேலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள கள்ளிப்பாடி ஆற்றிலிருந்து அனுமதி இல்லாமல் மணல் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்ற லாரியை மடக்கி சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது லாரி ஓட்டுனர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடியதால் பின்னால் வந்த மற்ற மூன்று லாரிகளின் டிரைவர்களும் அதேபோல் லாரிகளை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர்கள் தப்பித்து விட்டனர். பின்னர் அந்த லாரிகளை தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் கைப்பற்றி வேப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் விசாரணையில் மணல் ஏற்றி வந்த 4 லாரிகளும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகரின் லாரிகள் என்பதும் அரசு அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வேப்பூர் ஆய்வாளர் ரமேஷ்பாபு மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.