கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் காவல்துறையினர் ஜெயங்கொண்டபட்டினம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் விவசாய நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் எடுத்து டிராக்டரில் ஏற்றும் பணி நடந்தது. இதை பார்த்து சந்தேகமடைந்த காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அங்கிருந்த 3 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அம்பிகாபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (19), மகேந்திரன் (22), ஜெயங்கொண்டபட்டினம் சேதுராமன் (30) ஆகியோர் என்பதும், அவர்கள் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து மண் கடத்த முயன்றதும் தெரியவந்தது.
உடனே காவல்துறையினர் மண் கடத்த முயன்றதாக அஜித்குமார், மகேந்திரன், சேதுராமன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக் லைன் எந்திரம், 2 டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.