கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி பொன்னுசாமி நகரைச்சேர்ந்தவர் சக்திவேல் சிவகாமி இவர்களது இரண்டரை வயது பெண் குழந்தை சரண்யா 15.10.2018-ம் தேதியன்று மாலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாமல் தாய் மற்றும் உறவினர்கள் தேடி வந்த நிலையில் திட்டக்குடி பெருமுளை ரோட்டில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து தலைமைக்காவலர் திரு.பழனிவேல் அவர்கள் மற்றும் காவலர் திரு.தீனதயாளன் அவர்கள் பணியில் இருந்தபோது வழி தெரியாமல் நின்று கொண்டிருந்த பெண்குழந்தையை அங்கிருந்த பொதுமக்கள் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
குழந்தைக்கு ஊர் மற்றும் பெயர் சரியாக சொல்ல தெரியவில்லை இதையடுத்து குழந்தையை தங்களது செல்போனில் படம் எடுத்த காவலர்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குழந்தை தங்களிடம் உள்ளதை பதிவிட்டனர். இதைப்பார்த்த பொதுமக்கள் சிலர் அளித்த தகவலின் பேரில் குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் போக்குவரத்துக் காவலர்களை சந்தித்து தங்கள் குழந்தை என்பதை தெரிவித்தனர்.
அதன் பேரில் விசாரணை செய்து தாயிடம் தக்க அறிவுரை வழங்கி பின் ஒப்படைத்தனர். காணாமல் போன குழந்தை அரைமணி நேரத்தில் கண்டறியப்பட்டதால் தாய் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வழிதவறி வந்த குழந்தையை சமயோஜிதமாக செயல்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போக்குவரத்துக் காவலர்களை பொதுமக்கள் மன நெகிழ்வுடன் பாராட்டினார்கள்.