கடலூர்: சிதம்பரம் ஓமகுளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக சிதம்பரம் நகர காவல்துறையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் ஆய்வாளர் திரு.அம்பேத்கர், பயிற்சி உதவி- ஆய்வாளர் திரு.புகழேந்தி மற்றும் காவல்துறையினர் நேற்று அந்த குடோனுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குன்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக சிதம்பரம் கொத்தவால் தெருவை சேர்ந்த முகமது மைதீன்(50) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.