மதுரை: 14 – வது புத்தகத் திருவிழா நிறைவு விழா தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சில முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். இன்றைய இளைஞர்களுக்கு முன்பிருந்த புத்தகம் வாசிப்பு ஆர்வம் தற்போது குறைந்து வருகின்றது, அதற்கு முக்கிய காரணம் அறிவியல் சாதன வளர்ச்சியே. அச்சாதனங்களின் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் நிறையவே உள்ளது. தற்போது தேர்வு மற்றும் போட்டி தேர்வுகள் எழுதும் எண்ணத்திலேயே மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மேலும் பொது அறிவை வளர்க்க ஏராளமான புத்தகங்களை படிக்க வேண்டும். எந்த கலையாக, தொழிலாக இருந்தாலும் பத்தாயிரம் மணி நேரம் தொடந்து பயிற்சி பெற்றால்தான் அத்துறைகளில் கைதேர்ந்தவராக முடியும் என தெரிவித்தார். அதேபோல்தான் புத்தகம் வாசிப்பும். மாணவப்பருவத்தில் புத்தக வாசிப்பை கட்டாயமாக்கவேண்டும். அதற்கு ஆசிரியர்கள் பெற்றோர் உறவினர்கள் ஊக்குவிக்கவேண்டும். மேலும் மதுரை மாநகரில் கடந்த ஆண்டை விட குற்றங்கள் நிறைய குறைந்துள்ளன இருந்தபோதிலும் கொலைக்குற்றதில் குற்றவாளிகளாக அதிகம் ஈடுபடுவது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய 15 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களே. அவர்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாமையும் மற்றும் படிப்பை பாதியிலேயே நிறுத்தியதும்தான் முக்கிய காரணம். இந்நிலையை மாற்றிட புத்தக திருவிழாவை நடத்துவோர் சமுதாய பணியாக கருதி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களின் பெற்றோர்களை நேரில் அணுகி அவர்கள் மீண்டும் படிப்பை தொடர வழிவகை செய்யவேண்டும் இதன்மூலம் வழிதவறும் இளைஞர்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் காவல்துறையுடன் இணைத்து கற்றறிந்த அனைவரும் கூட்டுமுயற்சி செய்தால் நல்ல குடிமகன்களை சமுதாயத்திற்கு உருவாக்கிக்கொடுக்கலாம் என உரையாற்றினார். மேலும் புத்தக திருவிழாவில் ஓவியம், பேச்சுபோட்டி, வினாடிவினா போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்