கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் எம்ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முனுசாமி(36). இவர் கடந்த 29–ந்தேதி காலையில் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றார்.
சிறிது நேரத்தில் அவர், திரும்பி வந்து போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் காவல் ஆய்வாளர் பீர்பாஷா தலைமையில் உதவி-ஆய்வாளர் சவுந்தரராஜன், சிறப்பு உதவி-ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் காவல்துறையினர் நேற்று காலை 6 மணிக்கு சேத்தாம்பட்டில் உள்ள ஒரு தனியார் கலலூரி அருகே வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை வழிமறித்தனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் அவர்கள் அங்கு நிற்காமல் வேகமாக சென்றுவிட்டனர். இதையடுத்து காவல்துறையினர் தங்களது வாகனத்தில் துரத்தி சென்றனர்.
சிறிது தூரம் சென்ற அவர்கள் மோட்டார் சைக்கிளை நடுவழியில் போட்டுவிட்டு வயல்வெளி பகுதியில் தப்பி ஓட முயன்றனர். அவர்களை துரத்தி சென்று காவல்துறையினர் மடக்கி பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
அதில், காவலகுடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மகன் குருப்பிரியன்(20), மற்றொருவர் அதே கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் சகுந்தரகுமார்(20) என்பவதும் தெரியவந்தது.
விசாரணையில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் முன்பு முனுசாமி நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் காவலகுடி, சோழதரம் ஆகிய இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடி பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது. இவ்வாறு திருடும் மோட்டார் சைக்கிள்களை சென்னை, திருச்சி போன்ற இடங்களுக்கு மொத்தமாக அனுப்பி விற்பனை செய்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்த 11 மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சோழத்தரம், சேத்தியாத்தோப்பு, கருவேப்பிலங்குறிச்சி மற்றும் ஆண்டிமடம் ஆகிய காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.