புதுச்சேரி: காவலர் வீரவணக்க நாளையொட்டி வீரமரணமடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் கடந்த 1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதியன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் வீரமரணமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களிலும், பணியின்போதும் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டில் பணியின் போது உயிர்நீத்த காவலருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி கோரிமேடு காவல் மைதானத்தில் நேற்று நடந்தது.
காவல்துறை இயக்குநர் திரு.சுனில்குமார் கவுதம் 2016 செப்டம்பர் முதல் 2017 ஆகஸ்ட் வரை பணியின் போது உயிர் இழந்த காவலர்களின் பெயர்களை வாசித்தார். இதில் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உட்பட 379 காவலர்கள் இடம் பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து நினைவு தூணுக்கு முதல்வர் நாராயணசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில், காவல் ஆயுதப்படை திரு.கமாண்டன்ட் மனோஜ்குமார் பர்ன்வால், காவல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.