கடலூர்: விருத்தாசலம் முல்லை நகரில் பாலை பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் அமோனியா வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் 3 மணிக்கு தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர்களில் இருந்து பால் பதப்படுத்தும் எந்திரங்களுக்கு இணைக்கப்பட்டிருந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக குழாயில் இருந்து அமோனியா வாயு கசிந்து அப்பகுதி முழுவதும் பரவியது. இதில் தொழிற்சாலையின் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, ஆசிரியர்கள், சாமர்த்தியமாக வகுப்பறைகளில் இருந்து மாணவர்களை வெளியேற்றினர். பின்னர் பள்ளியின் மாற்றுப்பாதை வழியாக மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி அலுவலக ஊழியர்கள் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இதேபோல் அப்பகுதியில் வசித்து வருபவர்களும் பதறியடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடினர்.
இதற்கிடையே இது பற்றி அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு விரைந்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை அடைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு விருத்தாசலம் தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் காவல் ஆய்வாளர் திரு.ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.