கடலூர்: இன்று(புதன்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினமாகும். இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சாதாரண உடை அணிந்தும் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி, அங்கு சந்தேக நபர்கள் யாரேனும் உள்ளனரா? என காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் உள்ள 10 சோதனை சாவடிகளில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் விருத்தாசலம் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருத்தாசலம் ரெயில்வே இருப்பு பாதை காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திருமாவளவன் மற்றும் காவல்துறையினர் ரெயில் நிலைய பகுதி, மணிமுக்தாறு பாலம், தண்டவாளங்கள், வயலூர் ரெயில்வே மேம்பாலம், சேலம்-கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலங்கள் ஆகியவற்றில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.
கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் படகுகளில் ரோந்து சுற்றி வருகின்றனர். மேலும் மீனவ கிராமங்களுக்கு சென்று சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ அல்லது கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்துக்கோ தகவல் தெரிவிக்கும்படி கூறி வருகின்றனர்.
இது குறித்து காவல் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதிலும் நேற்று மாலை முதல் 1,200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மறு உத்தரவு வரும் வரை இந்த பாதுகாப்பு பணி தொடரும் என தெரிவித்தார்.