கடலூர்: பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை(செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுற்றுலாதலமும், உலக புகழ்பெற்றதுமான சிதம்பரம் நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், முக்கிய வீதிகளில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூரில் பஸ் நிலையம், லாரன்ஸ் ரோடு, நேதாஜி சாலை, மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூரில் காவல்துறையனர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்தந்த ரெயில் நிலையங்களிலும், தண்டவாள பகுதிகளிலும் ரெயில்வே காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சோமசேகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடலூர் துறைமுக சந்திப்பில் ரெயில்வே காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி ரெயில்வே தண்டவாள பகுதிகளுக்கு சென்று சோதனை செய்தனர். மேலும் கடலூர் துறைமுக சந்திப்பில் நின்று சென்ற அனைத்து ரெயில்களிலும் காவல்துறையினர் ஏறி, பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
இது குறித்து ரெயில்வே காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வருகிற 7-ந் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோம் என்றார்.