கடலுரர்: நெய்வேலி அருகே உள்ள காட்டுப்பூனங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி அமுதா (46). கிருஷ்ணமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அமுதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமுதா தனது வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரையில் கட்டியிருந்த பசுமாட்டை அவிழ்த்து விட்டு வருவதற்காக ஏரிக்கரைக்கு சென்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அமுதாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறிக்க முயன்றார். இதில் திடுக்கிட்ட அமுதா நகையை விடாமல் பிடித்துக் கொண்டார். இதையடுத்து அந்த மர்ம நபர் அமுதாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தார். இதை தடுக்க முயன்ற அமுதாவின் கையில் கத்தி வெட்டு விழுந்தது.
அப்போது அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். நகையில் மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அமுதா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து அமுதா தெர்மல் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.