சென்னை : தீவிரவாத ஊடுருவலை தடுக்க வரும் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை உள்பட 14 கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது. கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் மும்பையில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தீவிரவாத தாக்குதலை தடுக்க நாடு முழுவதும் கடல் பகுதிகளில் 6 மாதங்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக தமிழகத்திலும் சென்னை உள்பட 14 கடலோர மாவட்டங்களில் வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் 48 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதற்கு ‘’சாகர் காவஜ்’’(கடல் கவசம்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஒத்திகையில் கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்புக்குழுமம், தமிழக போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஒத்திகையின்போது, போலீசார் தீவிரவாதிகள் போல உடை அணிந்து தாக்க முயற்சிப்பது போலவும், முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைப்பது போலவும் அவர்களை வீரர்கள் சுற்றி வளைத்து பிடிப்பது போலவும் ஒத்திகை நடத்தப்படும். வழக்கமாக ‘’ஆப்ரேஷன் ஆம்லா’’ என்ற பெயரில் நடந்து வந்த நிலையில் இந்த ஆண்டு அது சாகர் காவஜ் என்று மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.