கடலூர்: நெய்வேலி நகரை கலக்கிய 4 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 81 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இது பற்றி அறிந்ததும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்துக்கு வந்தார். அங்கு கைதான கொள்ளையர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். பின்னர் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை காவலட கண்காணிப்பாளர் விஜயகுமார் பார்வையிட்டார்.
இதற்கிடையில் நகைகள் மீட்கப்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் நகைகளை பறிகொடுத்தவர்கள் டவுன்ஷிப் காவல் நிலையத்துக்கு வந்தனர். இதில் 29–வது வட்டத்தை சேர்ந்த தீபா, இந்திராநகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி ஆகியோர் தங்களது நகைகளை அடையாளம் காட்டினர்.
இது பற்றி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நெய்வேலியை கலக்கிய கொள்ளையர்கள் 4 பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை பாராட்டுகிறேன். அவர்களிடம் இருந்து 81 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. நகைகளை பறிகொடுத்தவர்கள் தங்களது நகைகளை அடையாளம் காட்டவும், குற்றவாளிகளை அடையாளம் காட்டவும் அழைத்து வந்துள்ளோம். இந்த நகைகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். பின்னர் அந்த நகைகள் உரியவர்களிடம் வழங்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் பற்றாக்குறை உள்ளது. எனவே கூடுதலாக 300 காவலர்கள் ஒரு வாரத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் தெர்மல் காவல் நிலையத்துக்கு கூடுதல் காவலர்கள் ஒதுக்கப்படும்.
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அறை அமைக்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள், திருட்டு நகைகளை வாங்கக்கூடாது. நகைகளை விற்க வருபவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும். பின்னர் அந்த நகைகளுக்கான உரிய ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே அதனை வாங்க வேண்டும். நகைகளை வாங்கும் போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருட்டு நகைகளையோ, கொள்ளையடித்த நகைகளையோ வாங்கக்கூடாது. அதையும் மீறி வாங்கினால் சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.