கடலூர்: சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் சிதம்பரத்தில் நான்கு முக்கிய வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கிறது. இந்த நிலையில் வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு சரக்கு ஏற்றிவரும் லாரிகளை சாலையில் நிறுத்தி பொருட்களை இறக்குவதால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதை தவிர்க்கும் வகையில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் கடைகளுக்கு லாரிகளில் சரக்குகளை ஏற்றி வந்து இறக்கி கொள்ள வேண்டும். ஏனைய நேரங்களில் சரக்கு வாகனங்கள் உள்ளே வரக்கூடாது. மேலும் திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து வியாபாரிகள் தரப்பில் பேசுகையில், சிதம்பரம் கொத்தவால் தெரு, மாலைக்கட்டி தெரு ஆகிய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். எனவே இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி காவல் கண்காணிப்பாளர் நிஷா தெரிவித்தார்.
இதில் வர்த்தக சங்க தலைவர் சதீஷ்குமார், செயலாளர் ராசிமுருகப்பன், பொருளாளர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.