கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி அண்ணாசிலை அருகில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த கவியரசன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இங்கு ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 22–ந் தேதி மாலை வேலை முடிந்ததும் ஊழியர்கள் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். 23–ந் தேதி விடுமுறை என்பதால் நிதி நிறுவனம் திறக்கப்படவில்லை. இதைநோட்டமிட்ட மர்மநபர்கள், நிதி நிறுவன கட்டிடத்தின் இடதுபக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால், லாக்கரை உடைக்க முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் நிதி நிறுவனத்தில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக தெரிகிறது. மேலும், லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பிலான நகை–தப்பியது.
இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொள்ளையர்களை பிடிக்க ஸ்ரீமுஷ்ணம் ஆய்வாளர் திரு.செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவல்துறையினர், கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நிதி நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் பார்த்து, விசாரணை நடத்தினர். அந்த கேமராவில் 2 நபர்கள் முகத்தை மூடிக்கொண்டு கொள்ளையடிக்க முயன்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து, தனிப்படை காவல்துறையினர் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்ரீமுஷ்ணம் வார சந்தை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின்முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் மீது காவல்துறையினரருக்கு சந்தேகம் வலுத்தது.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஸ்ரீமுஷ்ணம் கி.கொடிக்கார தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் விஜயக்குமார் (37), திருபான்ஆழ்வார் தெருவை சேர்ந்த கந்தவேலு மகன் மணிகண்டன் (24) என்பதும் தெரியவந்தது. இதில் விஜயக்குமார், கொள்ளை முயற்சி நடந்த நிதி நிறுவனத்தின் எதிரே டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
மேலும், பிடிப்பட்ட 2 பேரின் உருவம், நிதி நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த உருவம் ஒத்துப்போனது. அதன் அடிப்படையில் விஜயக்குமார், மணிகண்டன் ஆகியோரிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் 2 பேர் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்றதை ஒப்புக்கொண்டனர். பின்னர், விஜயக்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
எனது டீக்கடைக்கு எதிரே தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அடிக்கடி நானும், எனது நண்பர் மணிகண்டனும் சேர்ந்து மது அருந்துவோம். அடிக்கடி கடன் வாங்கி மதுஅருந்துவதால் என்னால், கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. கடந்த சனிக்கிழமை இரவு நானும், மணிகண்டனும் மது குடித்தோம். இதனால் எங்களுக்கு போதை தலைக்கெறியதும், கடன் தொல்லையை சமாளித்து நிதி நிறுவனத்தை கொள்ளையடித்து பணக்காரர் ஆகலாம் என திட்டமிட்டோம். பின்னர், அன்று நள்ளிரவில் நிதி நிறுவனத்தின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தோம். யாருக்கும் தெரியாமல் இருக்க எங்களது முகத்தில் துணியை கட்டிக்கொண்டோம். அங்குள்ள லாக்கரை உடைக்க பல மணிநேரம் போராடினோம். ஆனால் எங்களால் பணம்–நகை இருந்த லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நாங்கள், எங்களது கைரேகை மற்றும் தடயங்களை அழிக்க மண்எண்ணெயை அங்குள்ள பொருட்கள் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பினோம். இந்த நிலையில் போலீசில் சிக்கிக் கொண்டோம்.
இவ்வாறு விஜயக்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து, விஜயக்குமார், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து, விருத்தாசலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர், 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.