கடலூர்: கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை காவல்துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த பஸ்சில் வந்த வாலிபர் ஒருவரின் பையையும் காவல்துறையினர் சோதனையிட்டனர். சோதனையில் அவர் வைத்திருந்த பையில் ரூ.2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. மொத்தம் ரூ.26 லட்சம் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் அந்த வாலிபரையும், பணத்தையும் கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல்துறையினர் பிடிபட்ட வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சென்னை மண்ணடியை சேர்ந்த பான்ஸ்பிர் மகன் காஜா (27) என்பதும், அவர் சென்னையில் செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
அப்போது அவருக்கு நண்பரான சென்னை ராயபுரத்தை சேர்ந்த பாரூக் என்பவர் தான் கொடுக்கும் பணத்தை 3 பேரிடம் கொடுத்தால் உனக்கு சம்பளமாக ரூ.3 ஆயிரம் தருவதாக கூறியதாகவும், அதை நம்பி ரூ.26 லட்சத்தை அரசு சொகுசு பஸ்சில் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த பணத்திற்கான எவ்வித ஆவணமும் அவரிடம் இல்லை.
அந்த பணத்தில் கடலூர் முதுநகரை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு ரூ.5 லட்சமும், நாகூரை சேர்ந்த ராஜாவுக்கு ரூ.10 லட்சமும், காரைக்காலை சேர்ந்த ஜெயாலுதீனுக்கு ரூ.11 லட்சமும் கொடுப்பதற்காக கொண்டு வந்ததாகவும் அவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம், விசாரித்ததில் அந்த பணம் ஹவாலா பணம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து காஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் நரசிம்மன் கூறுகையில், ஹவாலா பணம் கடத்தி வந்ததாக சென்னை மண்ணடியை சேர்ந்த காஜா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து மொத்தம் ரூ.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் நாளை(அதாவது இன்று) வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.
சாராயம், மது கடத்தலை தடுப்பதற்காக காவல்துறையினர் நடத்திய சோதனையில் வாலிபரிடம் ரூ.26 லட்சம் பணம் பிடிபட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.