சென்னை: பெருநகர காவல், புனித தோமையர் மலை மாவட்டம், S-6 சங்கர் நகர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக்காவலராக பணிபுரிந்து வரும் திருமதி.தேன்மொழி என்பவர் தமிழ்நாடு ஹாக்கி அசோசியேஷன் மூலம் தேர்வு செய்யப்பட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான மாஸ்டர் ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் இந்திய மாஸ்டர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இத்தாலியில் நடைபெற்ற மாஸ்டர் ஹாக்கி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பெற்றதை தொடர்ந்து வருகின்ற 04.10.2019 முதல் 11.10.2019 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் மாஸ்டர் ஹாக்கி போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா செல்லவுள்ளார்.
மேற்படி பெண் தலைமைக்காவலர் திருமதி.தேன்மொழியை (த.கா.25562) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (01.10.2019) நேற்று நேரில் அழைத்து புதிய ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயணவசதிகளை வழங்கி இந்திய நாட்டிற்கும், தமிழக காவல் துறைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் விளையாடி வெற்றி பெற்று வரவேண்டும் என்று வாழ்த்தி வழி அனுப்பிவைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப புனித தோமையர் மலை துணை ஆணையாளர் திரு.பிரபாகர், சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.முகமது பரக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
                                











			
		    


