கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் தலைகவசம் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வரும் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கி வந்தனர்.
இந்நிலையில் 11.11.2018-ம் தேதியன்று கடலூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு.சதீஸ்குமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரி நோக்கி சென்ற வாகனத்தை தணிக்கை செய்தபோது சீட் பெல்ட் அணிந்து காரை ஓட்டி வந்த புது மணமகன் மற்றும் மணப்பெண்ணை காவல்துறை சார்பில் பாராட்டி அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. காவல்துறையினரின் இத்தகைய விழிப்புணர்வைக் கண்டு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.