கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனரின் கை துண்டானது.
சிதம்பரத்திலிருந்து புதுச்சேரி சென்ற பாலாஜி என்ற தனியார் பேருந்து, புவனகிரியையடுத்துள்ள திருவள்ளுவர்நகர் வளைவில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் ராஜேஷின் கை துண்டானது. 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிதம்பரம், புவனகிரி அரசு மருத்துவமனைகளிலும், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளோர், புதுவை ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புவனகிரி காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஓட்டுனர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது