கடலூர்: கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன், உதவி- ஆய்வாளர் திரு.ஞானசேகரன் மற்றும் காவல்துறையினர் நேற்று புதுப்பாளையம் 4 முனை சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் வழிமறித்தனர்.
அந்த ஆட்டோவில் ஒரு ஆணும், பெண்ணும் இருந்தனர். ஆட்டோவை காவல்துறையினர் சோதனை செய்த போது, அதில் 5 சாக்கு மூட்டைகள் இருந்தன. அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் 200 லிட்டர் சாராயத்தை பாக்கெட்டுகளாக போட்டு இருந்தது.
இதற்கிடையே அந்த ஆட்டோவை ஓட்டி வந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து ஆட்டோவில் இருந்த 2 பேரையும் காவல்துறையினர் பிடித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாதிரிக்குப்பம் முருகன் மனைவி அஞ்சலாட்சி (32) புதுப்பாளையம் முத்துக்குமரன்காலனியை சேர்ந்த பழனி மகன் மாதவன் (22) என்று தெரிய வந்தது.
இவர்கள் 2 பேரும் புதுச்சேரியில் இருந்து 200 லிட்டர் சாராயத்தை கடத்தி, கடலூரில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரான புதுப்பாளையம் ரவி மகன் ஜீவானந்தம் (25) என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து அஞ்சலாட்சி, மாதவன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 200 லிட்டர் சாராயத்தையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். தப்பி ஓடிய ஜீவானந்தத்தை தேடி வருகின்றனர்.